Sunday, November 15, 2009

இந்தியாவா ? இலங்கையா? சாதிக்கப்போவது யார்?


     இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நாளை இந்தியாவின் அகமதாபாத்தில் ஆரம்பமாகிறது.அரசியலில் சகோதரர்கள் போல் வாழ்ந்து வரும் இவ்விரு நாடுகளும் மோதிக்கொள்கின்றதென்றால் அது விளையாட்டில் மட்டும் தான் சாத்தியம்.போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே முதலாவது சுவாரசயமான விடயமாக பாலகன் சிறீசாந் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.கர்பஜனும் சிறிசாந்தும் IPL மோதலுக்கு பின்னர் ஒரே அணியில் விளையாடுவது இதுவே முதல் தடவை.
இன்னுமா எங்களை இந்த உலகம் நம்பீட்டிருக்குதுடெஸ்ட்  போட்டிகளின்  விறுவிறுப்பை அதிகரிக்க ஆண்டுக்கொருமுறை அல்லது இரண்டு ஆண்டுக்கொருமுறை  தரப்படுத்தலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கிடையில் இறுதிப்போட்டி நடாத்தி டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கப்போவதாக  ICC அறிவித்துள்ள நிலையில் இனிவரும் காலங்களில்  நடைபெறும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் முக்கியத்துவம் இருக்கும்.
  இனிமேல் மைதானத்தில வீரர்கள் தூங்க மாட்டாங்க
 


இந்த தொடரில் இலங்கை அணி 2-0  என வெற்றிபெற்றால்   அவர்களால்  தரப்படுத்தலில் முதலிடத்தை கைப்பற்ற முடியும். இதே நேரம்  இந்த தொடரை வெற்றி பெற்றாலே இந்திய அணியால் முதலிடத்தை கைப்பற்ற முடியும் .  2003 ஆம் ஆண்டு ICC யினால் அறிமுகப்படுத்தப்பட்டசர்வதேச டெஸ்ட் தரப்படுத்தல்களில் அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவுமே இதுவரை முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டிருக்கின்றன.ஆகவே முதன்முறையாக ஆசிய அணியொன்றுக்கு முதலிடத்தை  கைப்பற்றும் சந்தர்ப்பத்தை வழங்கும்  தொடராக இது சரித்திர முக்கியத்துவம் பெறுகிறது. போட்டிகளுடன் பலே நடனமும் உண்டு

இலங்கை டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 27 வருடங்கள் ஆகின்ற நிலையில் இந்திய மண்ணில்  இதுவரை 14 டெஸ்ட் போட்டியில் விளையாடியும் அவற்றில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட  இவர்களால் வென்றெடுக்க முடியவில்லை .ஆகவே இந்த அவப்பெயரை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு சங்கக்கார தலைமையிலான இலங்கை அணிக்கு திணிக்கப்பட்டிருக்கினறது.


Hundreds 4 u thousands 4 me


பலம்
 • மகேல,சமரவீர,சங்ககார  என பலமான மத்திய வரிசை
 •  அண்மைக்காலமாக கைகொடுத்துவரும் டில்சானின் அதிரடி ஆட்டம்
 • சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் முரளி,மெண்டிஸ்,ஹேரத் சாதிக்கலாம்
பலவீனம்
 • இந்திய மண்ணில் இலங்கையின் படுமோசமான கடந்தகால பெறுபேறுகள்
 • அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் 
 • டில்சானுடன் நிரந்தரமற்ற ஆரம்ப ஜோடி(கண்டம்பிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்)
 •  
பொதுவாக  அனைத்து நாடுகளிலும் சர்வதேச போட்டிகளில் இப்போது  கொக்கப்புறா பந்து பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில்  இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் SG எனப்படும் ஒருவகைப்பந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது.இது கொக்கப்புறா பந்தை விட அதிக கடினத்தன்மை கொண்டதாக காணப்படுவதால் 50-60 ஓவர்கள் வரை துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகத்தன்மையை வழங்கி வருகிறது. இதனாலேயே இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.இதனால் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் இந்தப்பந்தில் விசேட பயிற்சி செய்ய வேண்டிய கட்டாய தேவை ஒன்றும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கு இலங்கைக்கு நல்ல சந்தர்ப்பமாக இருந்த பயிற்சி போட்டியும்  கைவிடப்பட்டமை துரதிஸ்டம்.

  இந்தியா


  அண்மையில் அவுஸ்திரேலியாவுடனான அதிர்ச்சி தோல்வியால் பல்வேறு அழுத்தங்களுக்கு  உள்ளாகியிருக்கும் தோனி தலைமையிலான இந்திய அணிக்கு ரசிகர்களை திருப்திப்படுத்த இந்த தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் . இதேநேரம் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிறிக்கெட்டில் முப்பதாயிரம் ஓட்டங்களை பெற இன்னும் 39 ஓட்டங்களே தேவைப்படுவதால் அவருக்கும் இந்த தொடர்  முக்கியமானதாக அமையும்.  அதிகமான விளம்பரங்களில் நடித்து விமர்சனத்துக்குள்ளான சச்சின், தற்போது டோனி அவரை மிஞ்சி விட்டார்

  பலம்
  • சொந்தமண்ணில் சூரப்புலிகள்
  • சேவாக்,காம்பீர்,ராவிட்,சச்சின்,டோனி,யுவராஜ் என அச்சுறுத்தும் துடுப்பாட்ட வரிசை.
  • சகீர்கானின் மீள்வருகையால் பலவீனமாக இருந்த பந்துவீச்சு வரிசையும்  பலம்பெறுகிறது.
  பலவீனம்
  • மோசமான களத்தடுப்பு .

  தனிப்பட்ட வீரர்களின் திறமையை வைத்து பார்க்கும் போது இந்தியா இலங்கையை விட மிக பலமான அணியாக காணப்பட்டாலும்.கிறிக்கெட் என்பது ஓர் அணியாக வீரர்கள் அனைவரும் ஒன்று பட்டு விளையாடும் போது அணியின் பலம் பல மடங்கு அதிகரிக்கும் என்பதே வரலாறு கூறும் உண்மை.
  ஆகவே இந்த விடயத்தில் இலங்கை இந்தியாவை மிஞ்சி நிற்பதை யாராலும் மறுக்க முடியாது.ஆகவே இலங்கை அணியில் உள்ள மூத்த வீரர்கள் தங்கள் முழுப்பலத்தையும் வெளிப்படுத்தினால் இந்திய மண்ணில் இதுவரை வெல்ல முடியாமல் போன சரித்திரத்தை மாற்றியமைக்கலாம்.இல்லாவிடின் வழமை போல இந்தியா வெற்றி வாகை சூடும்.
  Friday, November 13, 2009

  இரண்டு தசாப்தங்களை நிறைவு செய்யும் சச்சினின் சாதனை பயணம்

  இன்றுடன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து 20 வருடங்கள் நிறைவு பெறுகின்றது.இருபது ஆண்டுகளாக கிறிக்கெட்டில் ஆற்றிய சேவைக்கும் சாதனைகளுக்கும் பாராட்டுக்கள்.
  விருதுகள்
  •      விஸ்டன் சஞ்சிகையால் இதுவரை கிரிக்கெட் விளையாடிய  சிறந்த   ஒருநாள் மற்றும் டெஸ்ட்  துடுப்பாட்டவீரர்களுக்கான தரப்படுத்தலில் இரண்டாம் இடம்   .
  • இந்தியாவில் இரண்டாவது உயரிய குடிமுறை விருதான பத்ம விபூஷண் விருது
  •  இந்தியாவில் விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் இவர் பெற்றுள்ளார்.

  ஒருநாள் போட்டிகளின் சாதனைகள்
  •  தன்னுடைய வயதை விட அதிக சதங்களை அடித்த ஒரே ஒரு கிரிக்கெட் வீரர்
  • அதிகமான சிறப்பாட்டக்காரர் விருது பெற்ற வீரர்
  • அதிக மைதானங்களில் விளையாடிய வீரர்
  • அதிக ஓட்டங்கள்
  • அதிக சதங்கள்
  • அதிகமான தடவை ஐம்பது ஓட்டங்களுக்கு மேல் பெற்ற வீரர்
  • பத்தாயிரம் ஓட்டங்களுக்குமேல் பெற்ற வீரர்களில் சிறந்த சராசரியுடைய வீரர்.
  •  
  டெஸ்ட்  போட்டிகளின் சாதனைகள்

  • அதிக சதங்கள் .
  • அதிக மைதானங்களில் விளையாடிய வீரர்.
  • டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இனிங்சில் பத்தாயிரம் ஓட்டங்களை பெற்ற வீரர்
  • பத்தாயிரம் ஓட்டங்களை பெற்ற வீரர்களில் சிறந்த சராசரியுடைய வீரர்.
  •  

   சச்சின் டெண்டுல்கருக்கு சர்வதேச கிறிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற ஒரே ஒரு வீரர் என்ற சாதனையை நிலைநாட்ட இன்னும் 39ஓட்டங்களே தேவைப்படுகின்றன.

   சச்சின் டெண்டுல்கர் சதம் பெறும் போட்டிகளில் இந்திய அணி தோற்பது எழுதி வைக்கப்படாத மரபாக மாறியிருப்பதாக சில ஊடகங்கள் விமர்சிக்கின்றன.  ஆனால் அவர் சதம் பெற்ற 45  ஒருநாள் போட்டிகளில்  13 இல் மாத்திரமே இந்திய அணி தோல்வியுற்றிருக்கின்றது.

   2000 ஆம் ஆண்டிலிருந்து கூட அவர் பெற்ற  21 சதங்களில்  9 சதங்கள் மட்டுமே  இந்திய அணி தோல்வியுற்ற போட்டிகளில் பெறப்பட்டவை.
   இறுதிப்போட்டிகளில் பெற்றுக்கொண்ட சதங்கள் ஐந்து.அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

   சச்சின் டெண்டுல்கர் ஒரு மட்ச் வின்னர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


   இன்னும் பல ஆண்டுகள் இவரின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.    Sunday, October 25, 2009

    இலங்கை வலைப்பதிவாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்துவரும் இருக்கிறம் சஞ்சிகைக்கு பலகோடி நன்றிகள்.

    இலங்கை வலைப்பதிவாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இருக்கிறம் சஞ்சிகையினால் நடாத்தப்படுகின்றதன் மூலம் நமக்கெல்லாம் மீண்டுமொருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

    இடம் : இருக்கிறம் அலுவலகம்
    இல 3, டொரிங்டன் அவெனியூ
    கொழும்பு 7.

    காலம் : நவம்பர் மாதம் 2 ஆம் திகதி
    மாலை 3 மணி


    வருகை தர விரும்புபவர்கள் எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் தங்களின்
    வருகையை பின்வருமாறு உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்த : irukiram@gmail.com
    தொலைபேசிமூலம் உறுதிப்படுத்த : 0113150836
    Tuesday, October 20, 2009

    யுசைன் போல்ட் பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் அசத்திய வீடியோ காட்சிகள்


    கெயிலுக்கு பந்துவீசும் காட்சிகள்

    உலகின் அதிவேக மனிதர் என வர்ணிக்கப்படும் யுசைன் போல்ட் மேற்கிந்திய தீவுகளில் நேற்று நடைபெற்ற கண்காட்சி கிறிக்கெட் போட்டியொன்றில் விளையாடினார்.
    எதிரணி வீரரான கிறிஸ் கெயிலுக்கு இவர் முதல் பந்தாக பவுண்சர் பந்தை வீச அதை அவர் சிக்சராக விளாசினார்.
    இரண்டாவது பந்தாக மிகவும் சிறந்த பந்து வீச்சை வீசி கெயிலை போல்ட் செய்து அனைவரையும் பரவசப்படுத்தினார் .


    துடுப்பெடுத்தாடும் காட்சிகள்

    துடுப்பாட்டத்திலும் பவுண்டரி,சிக்சர்களை விளாசி 23 ஓட்டங்களை குவித்தார்.

    எதிரணியில் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிறிக்கெட் நட்சத்திரங்களான Walsh, Richie Richardson, Curtley Ambrose ஆகியோரும் தற்போதைய நட்சத்திரங்களான Gayle, Ramnaresh Sarwan, Jerome Taylor ஆகியோரும் விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இதன் போது கருத்து தெரிவித்த போல்ட் தான் சிறு வயதிலிருந்து வேகப்பந்து வீச்சாளராக வரவே ஆசைப்பட்டதாகவும் தனது தனிப்பட்ட பயிற்சியாளரே தன்னை தடகள வீரராக மாற்றியதாகவும் குறிப்பிட்டார்.

    இப்போது IPL அணிகளின் உரிமையாளர்களின் பார்வை போல்ட் பக்கம் திரும்பியிருக்கிறதாம்.

    Monday, October 19, 2009

    இலங்கை கிறிக்கெட்டை அதிரவைத்த யாழ் மாவட்ட பாடசாலைகள் அணி


    இலங்கையில் பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கிடையில் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் அணிக்கு ஆறு பேர் விளையாடும் ஐந்து ஓவர் கடினப்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இந்த வருடம் முதல் முறையாக வடக்கு கிழக்கிலிருந்து பாடசாலைஅணிகள் பங்கு பற்றியிருந்தன. இதில் பங்கு பற்றிய யாழ்ப்பாணம் கல்லூரிகள் அணி காலிறுதிவரை முன்னேறி முன்னணி கொழும்பின் பிரபல கல்லூரிகளுக்கு அதிர்ச்சியளித்தது.


    யாழ் மாவட்ட பாடசாலைகள் அணி

    கொழும்பு, கெம்பல் பார்க் மைதானத்தில் நேற்று முடிவடைந்த அணிக்கு 5 ஓவர்களைக் கொண்ட இந்த போட்டி தொடரில் தேசிய அளவில் 25 பாடசாலைகள் பங்குபற்றின. இதில் எவரும் எதிர்பார்க்காதவகையில் தனது முதல் போட்டியில் லைசியம் கல்லூரியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்திய யாழ்ப்பாணம் கல்லூரிகள் அணி இரண்டாவது போட்டியில் மிகவும் பலமான கொழும்பு சென் தோமஸ் கல்லூரியை 4 விக்கெட்டுகளால் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.


    எனினும் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கொழும்பு ரிச்மன்ட் கல்லூரியை சந்தித்த யாழ்ப்பாணம் கல்லூரிகள் அணி மிகவும் துரதிஸ்டவசமாக 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.    இந்த போட்டியில் பங்கேற்ற ரோயல் கல்லூரி, ஆனந்தா கல்லூரி, நாலாந்தா கல்லூரி ஆகிய முன்னணி பாடசாலைகள் ஆரம்ப சுற்றிலேயே தோல்வியடைந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து முதல் முறையாக தேசிய மட்ட கிறிக்கெட் தொடரொன்றில் பங்கேற்ற யாழ் மாவட்ட கல்லூரிகள் அணி காலிறுதிவரை முன்னேறியது இலங்கை கிரிக்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த அணியில் விளையாடிய அனைவருக்கும் எதிர் காலத்தில் மேலும் சிறப்பாக விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்து நம் மண்ணின் பெருமையை உலகுக்கு காட்ட வேண்டுமன வாழ்த்துகிறேன்.

    Wednesday, September 2, 2009

    காதலுக்காக‌ நேர்ந்துவிடப்பட்ட கவிதைகள் நாம்...


    எத்தனை முறை
    ஒத்திகை பார்த்து தொடங்கினாலும்
    எண்ணியதை எல்லாம்
    சொல்லிவிட‌
    ஏன் இந்த இயலாமை....

    விட்டுக்கொடுக்க காத்திருக்கிறேன்
    ஒரு சில சந்தர்ப்பங்களையாவது
    விட்டுக்குக்கொடு
    எனக்கும்..

    காதலுக்காக‌
    நேர்ந்துவிடப்பட்ட
    கவிதைகள் நாம்...

    என்னை கடந்து நீ
    எத்தனை முறை சென்றாலும்
    படபடக்கும்
    இந்த இதயம்
    உன் அருகில் இருக்கையில்
    என்ன செய்ய போகிறதோ...

    அம்மா பிடிக்குமா?
    அப்பா பிடிக்குமா ?
    தடுமாறும்
    குழந்தையாய் நானும்..
    உன் மௌனம் பிடிக்குமா இல்லை
    உன் பேச்சு பிடிக்குமா
    என்ற கேள்விகளூடன்
    தடுமாறிக்கொண்டிறுக்கிறேன்...


    என் வீட்டு ஜன்னலில்
    இப்போதெல்லாம்
    நிலவு வருவதில்லை
    பதிலுக்கு உன் நினைவுகள்
    ஏறி இருந்து
    ஆர்ப்பட்டம் பண்ணுகின்ற‌ன‌

    உன்னோட தடயங்களுடனேயே
    உன்னையே
    சிந்த்தித்துக்கொன்டிருந்த நான்
    உன் சின்னங்களையே
    பெற்ற பிறகு
    எங்கே போவேன்...

    என் நினைவு இல்லாமல் போகலாம்
    உனக்கு அனால்
    என்னை
    நினைத்தது கூடவா
    உன் நினைவில் இல்லமல் போகும்...